தமிழக சட்டப்பேரவையின் 4ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (17.10.2025) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேரவையில் பதிலளித்துப் பேசினார்.
அதில், “03.10.2025 அன்று சீசன் பார்மசியூட்டிகல் நிறுவனத்திற்குப் பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த ஸ்டாப் ப்ரொடக்ஷன் ஆர்டர் பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் மூடப்பட்டது. 1ஆம் தேதி (01.10.2025) தகவல் வருகிறது. இவ்வாறு தகவல் வந்த உடனே இந்தியா முழுக்க யார் இந்த மருந்தை வாங்கினார்களோ அவர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பப்பட்டு இந்த மருந்து பயன்படுத்தப்பட வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கிற எந்த மருந்துக்கடையிலும் இந்த மருந்தை விற்கக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இரண்டு நாட்களில் நடைபெற்ற இத்தனை சம்பவங்கள் இது.
3ஆம் தேதியே ஸ்டாப் ப்ரொடக்ஷன் ஆர்டர் கொடுத்து கம்பெனியை மூடுகிறோம். மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்டீசன் பார்மசியூட்டிக்கல் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுமையாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது? எனக் கேள்வி எழுப்பி குறிப்பானை நோட்டீஸ் ஒன்று அனுப்பப்படுகிறது. இல்லையெனில் மருந்து நிறுவனத்தை உடனடியாக மூட முடியாது என நீதிமன்றத்திற்குச் சென்று விடுவார்கள். அதனால் ஒரு குறிப்பானை அனுப்புகிறோம். இந்த குறிப்பானை அனுப்பியதற்கு இடையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து 25 நாட்களுக்குப் பிறகு தான் தகவல் வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி (04.09.2025) ஒரு குழந்தை இறக்கிறது. ஆனால் மத்தியப் பிரதேசத்திலிருந்து 01.10.2025 அன்று 25 நாள் கழித்து தகவல் அனுப்புகிறார்கள்.
ஒரு மாநிலத்தில் மருந்து கொள்முதல் செய்யப்படுகிற போது அங்கே உள்ள டிரக் கண்ட்ரோலர் அந்த மருந்தை ஆய்வு செய்ய வேண்டும். மாநிலத்தில் இந்த மருந்தை நாம் பயன்படுத்த உள்ளோம். இதனைப் பயன்படுத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அங்கே உள்ள டிரக் கண்ட்ரோலர் ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தின் டிரக் கண்ட்ரோலரும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த மாதிரி ஆய்வே செய்யாமல் இந்த மருந்து விற்பனையை அவர்கள் ஊக்குவித்த காரணத்தினால் 04.09.2025 அன்று இறந்த குழந்தைக்கு அந்த மருந்து நல்ல மருந்து என்று சான்றிதழ் தருகிறார்கள்.
இந்த மருந்தால் பாதிக்கப்பட்டு ஒரு குழந்தை இறந்திருக்கிறது என்று தனியார் மருத்துவர் ஒருவர் இதைப் பரிந்துரை செய்திருக்கிறார். அந்த தனியார் மருந்துக் கடையிலிருந்து இந்த மருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது. இந்த குழந்தை இறந்திருக்கிற நிலையில் அந்த 04.09.2025 அன்றைக்கு மத்தியப் பிரதேச டிரக் கண்ட்ரோலர், அங்குள்ள அமைச்சர் ஆகியோர் இந்த மருந்து நல்ல மருந்து என்கின்றனர். நல்ல மருந்து என்று சொல்லிவிட்டு 9ஆம் தேதி வரையில் 25 குழந்தைகள் இறந்துள்ளனர். இவ்வாறு தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில் அரசு துரித கதியில் செயல்பட்டதன் விளைவாக இன்றைக்கு ஒட்டுமொத்தமாக 126 மருந்துகளும் தடை செய்யப்பட்டது. நிறுவனமும் மூடப்பட்டது” எனத் தெரிவித்தார்.