கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கணாங்கொல்லை கிராமத்தில் நடைபெற்ற விழாவில், செங்கணாங்கொல்லை மற்றும் பெருவங்கூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள 110/22 கிலோ வாட் கொண்ட துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

Advertisment

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 64,747 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 9,951 விவசாய மின் இணைப்புகள், 37,301 வீட்டு மின் இணைப்புகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் என மொத்தம் 64,747 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முழுநேர சீரான மின் விநியோகத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 

Advertisment

செங்கனாங்கொல்லை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுக ஆட்சியில் துணை மின் நிலையம் அமைப்பதாக, பலமுறை அறிவித்து நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்றைக்கு திமுக ஆட்சியில் இப்பகுதியில் புதிதாக துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த மின் அழுத்த பிரச்சனை நீங்கி, சீரான மின் வினியோகம் வழங்க முடியும். 

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 30 முதல் 35 சதவீதம் அளவுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 95 சதவீதம் மின்  விநியோகம் வழங்கப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் இந்த நான்கரை ஆண்டுகளில் மலைப் பகுதிகளிலும் 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கி இந்தியாவிலேயே தமிழகம் மின் விநியோகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது எனக் கூறினார்.

Advertisment

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று அமைச்சர் வேலு என்னிடத்தில் தெரிவித்தார். ஒரு சின்னக் குறையாக இருந்தாலும் அதனை உடனடியாக போக்க வேண்டும் என்று அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொண்டு, செயல்பட்டு வருகிறேன் என்றும், தமிழகத்தில் மாவட்ட அளவில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூர் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அதற்கான பணியை விரைந்து முடித்து, உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். செங்கனாங்கொல்லை துணை மின் நிலையம் மூலம் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள். பெருவங்கூர் துணை மின் நிலையம் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த இரண்டு துணை மின் நிலையங்கள் மூலம் ஏறத்தாழ 50 ஆயிரம் இணைப்புகள் பயன்பெறுவார்கள்” என்றார்.

மேலும், “விடுபட்ட இல்லத்தரசிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியதும், பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதை தொடர்ந்து, ஆயிரம் ரூபாய் என்று சொன்னவுடன் எல்லாம் எப்படி கைத்தட்டுகிறார்கள் பாருங்கள் என்று நகைச்சுவையாக கூறிய ஏ.வ.வேலு, ஒருவர் சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக இலவச மின்சாரத்தை கலைஞர் கொண்டு வந்தார். இலவச மின்சாரம் மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு நான் ஒரு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டி வரும்” என்றும் தெரிவித்தார்.