நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என, அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், இந்த உத்தரவை மீறிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. இதற்கு நாடெங்கும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

அரசின் இந்த முடிவு இளைஞர்கள் (Gen Z) தலைமையிலான பெரும் பேராட்டமாக வெடித்தது. இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறி, கத்த்மண்டுவில் அரசு கட்டடங்கள், அமைச்சர்கள் வீடுகள் தாக்கப்பட்டன. நிலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமூக வலைதளங்களிலான தடை நீக்கப்பட்டது. ஆனால், வன்முறைகளும் போராட்டங்களும் நாட்டில் ஓய்ந்தபாடியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். நாளுக்கு நாள் நிலை மோசமாகிக் கொண்டிருந்ததைக் கவனித்த சர்மா ஒலி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் என அடுத்தடுத்த ராஜினாமா சம்பவங்கள் அரங்கேறின. ஆனாலும் போராட்டங்கள் மட்டும் ஓய்ந்தபாடியில்லை. நிலை கையை மீறிச் சென்றது. அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகள், அரசு கட்டிடங்கள் என்று குறிவைத்து அடித்து துவம்சம் செய்ததோடு, நாடாளுமன்றக் கட்டிடத்தையும் தீயை வைத்துக் கொளுத்தியது.

இது ஒரு புறம் என்றால், நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவியை உயிரோடு கொளுத்தியது, சாலையில் ஓட ஓட விரட்டி நிதியமைச்சர் உதைத்தது, வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியது என்று அடுத்தடுத்த பகீர்ச் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறியதையடுத்து, நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்று, நேபாளம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளின் குடும்பத்தினர் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக ராணுவத்தினர் அவர்களைப் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.