தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விஜய் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “சி.எம். சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தது என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தின் மூத்த அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வேலூரில் இன்று (04.10.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். ஆனால் எங்கள் கட்சிக்காரர்களைத் தொடக்கூடாது. எதுவும் பண்ண வேண்டாம் என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் விஜய்.
அது அரசை நேரடியாகச் சவால் விடுவது போன்று இருக்கிறதாம். இது குறித்து உங்களின் பார்வை என்ன?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசுகையில், “அவர் ஒரு தலைவர். அதற்காக அவர் சொல்கிறார். அவர் தக்கபடி, அந்தக் கட்சிக்கு என்ன பேச வேண்டுமோ அதைப் பேசுகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால் கைது செய்வார்கள். தேவை இல்லை என்றால் அநாவசியமாக நாங்கள் யாரையும் அப்படி கைது செய்ய மாட்டோம்” எனத் தெரிவித்தார்.