வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியில் தமிழக அரசின் சிறப்புப் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று (08.01.2025) நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “முதலில் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். மேல்பாடியில் இந்த நிகழ்ச்சியை வைக்கக் காரணம், 1971இல் நான் தேர்தலில் போட்டியிட்ட போது கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் என்னை வெற்றிபெற வைத்தது இந்த பகுதி. எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மக்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் எனக் கருதுகிறேன். 

Advertisment

அரசுக்கு எவ்வளவு செலவு இருக்கும் என எங்களுக்குத் தான் தெரியும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக அறிவித்துள்ளார் நம் முதல்வர். இப்போது பொங்கலுக்கு மூவாயிரம், மகளிர் உரிமை தொகை ஆயிரம், கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் என ஆயிரம் ஆயிரமாகப் படி அளப்பவர் நமது முதல்வர். காலை உணவு, மதிய உணவு போடுகிறார் முதல்வர். இரவு உணவு எப்போது போடுவார் எனத் தெரியலை. எது எடுத்தாலும் ஆயிரம் என்பது போல் எதற்கெடுத்தாலும் ஆயிரம் ஆயிரமாகக் கொடுக்கிறார். இப்ப 3 ஆயிரம், அதே போலத் தேர்தல் வந்தால், ஒன்றும் கிடையாது, (ஏன் சிரிக்கிறிங்க) அது அவரவர் சமார்த்யம். நான் வாக்குறுதி கொடுத்தது போல் அரசு கலைக் கல்லூரி, மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளேன். 

Advertisment

அந்த அரசு மருத்துவமனையை 100 படுக்கை கொண்ட மருத்துவமனையாகக் கூடுதல் மருத்துவர், செவிலியர்களை நியமிக்க உள்ளேன். ஆக இவ்வளவும் செய்கிற ஒரு அரசாங்கம் அந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும். அதனால் தான் உங்கள் ஆதரவைக் கேட்கிறோம். அதனால் தான் இவ்வளவு பேருக்கு 3000 கொடுக்கிற பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். எனவே அவர்களின் கருத்தை வலுப்படுத்த வேண்டியது உங்களுடைய கரம். அவருக்கு நாங்கள் எல்லாம் கரமாக இருப்பதன் காரணத்தால் எங்களையும் வலுப்படுத்தி எங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கை வேறு என்ன ஓட்டுப் போடுங்கள் என்று தான் கேட்கிறோம்” என அமைச்சர்  துரைமுருகன் அரசு விழாவில் பேசி "இப்போதே ஓட்டு கேட்டார்".