Advertisment

மேகதாது அணை விவகாரம் : “எள்ளளவும் உண்மை இல்லை” - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!

durai-murugan-1

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

Advertisment

இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது. 

Advertisment

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார். இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

sc-tn-govt

இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. 

அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

sc

இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்” எனத் தெரிவித்துள்ளார்.

:Durai Murugan dam Karnataka Government megathathu Supreme Court tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe