காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான அமர்வில் இன்று (13.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை கட்டுவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்ய நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பை இப்போதே தமிழக அரசு எதிர்ப்பது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேகதாது அணையை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளாரும், எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மேகதாது அணையை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவின் எந்தவித அணையும் கர்நாடகா அரசு கட்டுவதற்கு இதுவரை மத்திய அரசு தரப்பிலோ, உச்ச நீதிமன்றமோ எந்தவித அனுமதி வழங்கவில்லை. இதனை திட்டவட்டமாக தமிழக அரசு மறுத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டிலேயே கர்நாடகா அரசு ஒரு திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.
இதற்கு தமிழக முதல்வர், மத்திய ஜல்சக்திதுறை அமைச்சரை நேரடியாக சந்தித்தும், பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதியும் நேரில் சந்தித்தும் இரண்டு மாநில ஒப்புதல் இல்லாமல் நிச்சயமாக இந்த அனுமதி வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படிபட்ட நேரத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது போன்ற பேச்சுக்கள் ஏற்புடையதல்ல. இதில் அரசியல் செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். தமிழக அரசை பொறுத்தளவில் இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை முழுமையாக செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/meghadurai-2025-11-13-17-14-22.jpg)