சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் காட்பாடி ஜோதி நகர் பகுதியில் 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், கரூர் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையை அதிகாரிகள் மேற்கொள்ளாவிடில் 2026 ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என சிரித்தபடி பதில் அளித்தார்.
தொடர்ந்து, திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டதாக ஜி.கே.வாசன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “சிங்கிள் ரூமுக்குள்ள கட்சியின் செயற்குழுவை நடத்துபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “கரூர் விவகாரத்தில் கமிஷன் போட்ட பிறகு நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் விசாரணை பாதிக்கும். கமிஷன் விசாரணைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும். கமிஷனையும் போட்டுவிட்டு மறுபுறம் நடவடிக்கையும் எடுப்பது சரியாக இருக்காது” என்றார். இதையடுத்து அவரிடம், உளவுத்துறை கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “உங்களுக்கு டைட்டில் வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற எதையும் என்னிடம் கேட்காதீர்கள்” என பதில் அளித்தார்.