நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக அரசியலால் தற்போது தீண்டாமை, பிரித்து ஆள்வது நிகழ்ந்துள்ளது. வறுமை இன்னும் ஒழியவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் இந்த மாநிலத்தின் கவர்னர் அல்ல; எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர். ஒரு கவர்னருக்கு உரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போல தரம் தாழ்ந்து பேசுகிறார். எனவே நாங்கள் அவரை கவர்னராக மதிப்பதும் இல்லை, அது பற்றி பேசுவதும் இல்லை. ஆளுநர் கூறியது போல் பிரிவினைவாதம் எங்கே தலைதூக்கியிருக்கிறது என்றால் அது வடநாட்டில் தான். ஆனால் தமிழகம் தான் இன்று எந்த விதமான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் தென்றல் தவழும் பூமியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே கவர்னர் எங்கள் மீது ஏதாவது பழி சொல்ல வேண்டும் என நினைக்கிறார். இந்த மாதிரி சொன்னவர்களை ஏராளமானவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். கவர்னரின் அந்த ஸ்டேட்மென்ட்டை நான் புறக்கணிக்கிறேன்” என்றார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, “நீதிமன்றம் என்பது நீதி சொல்வதற்காக இருப்பது. இரண்டு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் கொஞ்சம் கடுமையாக முன்வைத்திருக்கிறார்கள். அப்படியானால் இதில் நீதியும், கோபமும், கடமையும் இருக்கிறது என்று பொருள்” என்றார்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, “யாரையும் அனாவசியமாக அரசு கைது செய்யாது. ஆனால் ஆதாரங்கள் என்பது தவிர்க்க முடியாமல் இருந்தால் அப்போது சர்க்கார் தனது கடமையை செய்யும். எனவே வீண் பயத்தோடு அவர்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை” என்றார்.
கரூர் துயர சம்பவத்தில் இருந்து தமிழக கட்சிகள் எதை கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டதற்கு, “பொதுவாகவே அந்தந்த கட்சிகள் அவரவர்களின் நிலைமை மற்றும் தொண்டர்களின் வருகைக்கு ஏற்றவாறு இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நாங்களும் கமிட்டி அமைக்க இருக்கிறோம். நீதிமன்றமும் சொல்லியுள்ளது; விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
கரூர் சம்பவத்திற்கு திமுக காரணம் என பேசப்படுவது குறித்து கேட்டதற்கு, “எங்களுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? நாங்கள் போலீஸ் போட்டிருந்தோம், அனுமதி கொடுத்திருந்தோம், எப்படி செயல்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். இதில் எங்கள் மீது குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? நாங்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லவில்லையே. இவ்வளவு நடந்தும் கூட என்ன செய்ய வேண்டுமோ அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக இதில் எங்கள் மீது குற்றம் சொல்லுபவர்கள் தான் பகல் நேர அரசியல்வாதிகள்” என்றார்.
தவெக்-ஐ முடக்கத்தான் இதை திமுக செய்வதாக குற்றம் சாட்டப்படுவது குறித்து கேட்டதற்கு, “அப்படி ஒன்றும் எங்களை யாராவது பயமுறுத்திவிடுவார்கள், முடக்கிவிடுவார்கள் என சொல்வதற்கு தயாராக இல்லை. எந்த கோம்பனாலும் எங்களை ஆட்டிப்பார்க்கவும், அசைத்துப் பார்க்கவும் முடியாது. காரணம் இது எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம். அண்ணா சொன்னது போல் திமுக பாஷானத்தில் புழுத்த புழு; இதை வேறு ஒரு பாஷானம் அளிக்க முடியாது என்று சொன்னார். ஆகையால் எந்த கோம்பனும் எங்களைத் தொட்டு கூட பார்க்க முடியாது” என்றார்.
கரூர் சம்பவம் வரும் தேர்தலில் தவெக் அல்லது திமுக இரண்டு கட்சிகளில் எதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கேட்டதற்கு, “என்னங்க இது? யார் எந்த வேஷம் போட்டாலும் எந்த அணியில் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. We will come out with flying colours; நாங்கள் வெற்றி பெறுவோம். அந்தக் கட்சிகளுக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை” என்றார்.
கரூர் சம்பவத்தில் பாஜக ஆதாயம் தேட பார்க்கிறது என்ற கேள்விக்கு, “அதேதான்; அவர்களுக்கு ஒண்டிக் கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும் ஒரு இடம் வேண்டும். ஆகையால் யாருக்கு என்ன வந்தாலும் ஓடி ஓடிப்போய் பார்ப்பார்கள்” என்றார்.
தவெக்-பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, “எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும்...” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.