சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வழக்கமான நடைபயிற்சியின் போது முதலமைச்ர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் இது அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ நாகநாதன் ஆகியோர் வந்தனர்.
மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “முதல்வர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்துச் சென்றார்.
இதனிடையே, நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு, நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் செல்வதாக இருந்தது. ஆனால், இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.