பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி (04.11.2025) முதல் வரும் டிசம்பர் மாதம் 04ஆம் தேதி வரை என ஒரு மாதத்திற்கு வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து டிசம்பர் 09 ஆம் தேதி (09.12.2025) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 09ஆம் தேதி (09.12.2025) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி (08.01.2026) வரை பெயர்களைச் சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை மற்றும் சரிபார்த்தல் டிசம்பர் 09ஆம் தேதி (09.12.2025) முதல் ஜனவரி 31ஆம் தேதி (31.01.2026) வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி (07.02.20260 வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூட்டியிருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் எனக் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 09.11.2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். எனவே மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். பொருள் : வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR)” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us