தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.7.2025) காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இதுவரை மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்நிலையில் சென்னையில் காரில் அமர்ந்தபடி அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதல்வரின் உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''முதல்வர் நன்றாக இருக்கிறார். ஒன்னும் பிரச்சனை இல்லை. அவர் இன்று கூட பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார். காலையில் கூட கலெக்டர் கூட பேசினார்'' என்றார்.