kalமக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் காக்கும் மருத்துவ முகாம்களை இன்று (02-08-25)  சென்னையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களுக்கான ஸ்டால்களை ஒவ்வொன்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘நலன் காக்கும் மருத்துவ முகாம்’ தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு உயர் மருத்துவ சேவை முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராதாகிருஷ்ணன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

இது குறித்து அமைச்சர் சி.வெ கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் பொதுமக்கள் ஆரோக்கியமாகவும், சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் கலைஞர் வரும் முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நன்மைக்காக்கும் 48 திட்டம்,  இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரக பாதுகாப்பு சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் உடல் நலத்தினை பேனும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளார்.  இதில் தமிழக முழுவதும் 1256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

கடலூர் மாநகராட்சியில் 4  இடங்களிலும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 3 முகாம்கள் வீதம் 38 முகம்களும், கடலூர் மாவட்டத்தில் 43 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை எலும்பியல் மகபேரியல் மற்றும் மகளிர் மருத்துவம் குழந்தை மருத்துவம் இருதயவியல், நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மனநல மருத்துவம் நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட 15 மருத்துவ பிரிவுகளைச் சார்ந்த நிபுணர்கள் மூலம் சிகிச்சைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன” எனக் கூறினார்.