தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Advertisment

அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் பாமக தலைவர் அன்புமணி“கரூரில் உயிரிழந்தவர்களை பார்த்து அழுது புலம்பிய அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தரலாம். கள்ளக்குறிச்சிக்கு சென்று பார்க்காத முதல்வர் நள்ளிரவில் கரூர் செல்கிறார். நீதிமன்றமே குழு அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.  

Advertisment

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்! 

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment