தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவிகள் இணையவழி தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தி கற்கவும் என்பதற்கான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மாநில அளவிலான ஒரு அரசுத் திட்டம் ஒரு அரசுப் பள்ளியில் இருந்து தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க மாநில திட்ட  இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் இணை இயக்குநர் வை.குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் அருணா பேசியதாவது, “இந்த பள்ளியில் இருந்து 28 மாணவிகள் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளது பெருமைப்பட வைக்கிறது. செல்போன்கள் பாதிப்பு கண்ணுக்குத் தெரியாத பல பேர் நமக்கு தாக்கும் போது பாதுகாப்பு வேண்டும். அதற்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் அகல்விளக்கு. சமூகவலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. நான் வரும் போது 2 கோரிக்கைகள் வைத்தனர். அதாவது கூடுதல் கழிவறை வசதி, பள்ளி சாலை மேம்பாடு இந்த இரு கோரிக்கைகளும் உடனே நிறைவேற்றப்படும்” என்றார்.

Advertisment

an2

அதனை தொடர்ந்து திட்ட இயக்குநர் ஆர்த்தி பேசியதாவது, “பள்ளிக்கல்வி அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி அகல்விளக்கு என்ற புதிய திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. பெண்கள் தங்களது சொந்த விபரங்களை எங்கேயும் எப்போதும் பகிரக் கூடாது. அதனால் தான் ஆபத்து ஏற்படும். இந்த பயிற்சி 6 காலமாக பிரித்து 6 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்றார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, “கத்தார் தமிழ்சங்கம் விழாவில் பெண்கள் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு குத்துவிளக்கு ஏற்றினார்கள். கடல் கடந்தும் கலாச்சாரம் பாதுகாப்பவர்கள் நம் பெண்கள். இன்று ஏற்றிய அகல்விளக்கு திட்டம், மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் துறை அமைச்சரின் நடவடிக்கையால் இன்று கல்வியில் உலக அளவில் போட்டியில் உள்ளது தமிழ்நாடு” என்றார்.

an3

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒரு பெரிய திட்டத்தை ஏன் கீரமங்கலத்தில் தொடங்கினோம்? தலைநகரில் தான் எல்லா திட்டங்களும் தொடக்கவிழா நடக்கும். ஆனால் அகல்விளக்கு ஒரு பேரூராட்சி பள்ளியில் தொடங்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. மாணவிகள் பாதுகாப்பிற்கான அகல் விளக்கு திட்டத்தை தொடங்க நீங்கள் வரவேண்டும் என்று துணை முதல்வரிடம் சொன்ன போது, இந்த திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தொடங்கனும். ஏனென்றால் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம். அதனால் அங்கே தொடங்குவது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். அதன் பிறகு தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த கீரமங்கலம் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். டெக்னாலஜி வரமாகவும் சாபமாகவும் உள்ளது. அன்பாக பேசினால் மயங்கிடக்கூடாது. நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. பாதுகாப்பானது புத்தகம். அனைவரும் செல்போனில் மூழ்குவதைவிட புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிக்கலாம் என்கிறது புத்தகம் வாசிக்கலாம் என்கிறது செல்போன். எனக்கு பெண் குழந்தைகள் இல்லை ஆனால் தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகள் என் பிள்ளைகள் தான். பெற்றோர்களே! குழந்தைகள் வீட்டிற்கு வந்து பகிரும் தகவல்களை கவனமாக கேளுங்கள், கடிந்து கொள்ளாதீர்கள். வீடு வரும் குழந்தைகள் மனநிலையை பாருங்கள். அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள் பிரச்சனைகளை தீர்த்துவிடலாம். குழந்தைகளை சிக்கல்களில் சிக்காமல் மீட்டுவிடலாம்” என்றார்.

Advertisment

இறுதியாக பேசிய அமைச்சர் ரகுபதி, “புதுக்கோட்டையில் மொத்த மாவட்ட நிர்வாகம் பெண்களை கொண்ட மாவட்டம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான அகல்விளக்கு திட்டம் தொடங்கியதும் பெருமையானது. பள்ளியில் படிக்கும் உங்களுக்கு கவனங்கள் திசை திரும்பும். ஆனால் கவனச் சிதறல் கூடாது. கீரமங்கலம் பெருமை மிக்க ஊர் என்பதை நான் அறிவேன். இங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ள இடம். இந்த ஊர்காரர்கள் எந்த ஒரு தகவல்களையும் வேகமாக பரப்புவார்கள். அதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டம் நாடு கடந்தும் போய் சேரும்” என்றார். இந்த விழாவில் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த மாணவிகளுக்கு அகல் விளக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. தொடரந்து, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் கற்றல் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் தொகுத்திருந்தார்.