சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் 1 வார காலமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1560 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று (03-01-26) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச இருக்கிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 7 நாட்களாக நாங்களும் அதிகாரிகளும் பேசி வருகிறோம். நம்முடைய முதல்வர் கூட நேற்று திருச்சியில் இருந்து வரும் போது இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் கேட்டார். இன்றைக்கு பழைய ஓய்வூதியம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த 11 மணிக்கு முதல்வர் எங்களை அழைத்திருக்கிறார். அந்த கூட்டம் முடிந்தவுடன், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாகவும் பேசப்போகிறேன். இந்த கூட்டம் முடிந்த பின்பு தமிழக முதல்வர் என்ன அறிவுறுத்துகிறாரோ அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சரின் பேசி நல்ல முடிவை எடுப்போம்.

Advertisment

நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தான் கேட்கிறார்கள். இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் என்பது வெறும் பத்திரிகை செய்தி அல்ல. அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற விதமாக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுடைய வலி ஒரு துறையுடன் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. அதை பார்க்கும் போது அதற்கு ஒரு நல்ல விடிவை ஏற்படுத்திட வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. பொறுமையாக இருந்தாலும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆசிரியர்கள் படித்தவர்கள், அவர்களுக்கு தெரியும் எந்த அளவு வரை போராட்டம் நடத்த வேண்டும் என்று. இந்த நாட்டு மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடியவர்களாக தான் அவர்களை பார்க்க வேண்டும். எப்படியாக இருந்தாலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை கண்டிப்பாக கைவிட மாட்டேன்” என்று கூறினார்.