திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோஹித் என்ற மாணவன், பள்ளி சுவர் இடிந்து விழுந்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்ததாகவும், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த விபத்தில் காரணம் என்றும் ஊர் பொதுமக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் மோஹித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்தார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், மாணவர் மோஹித்தின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதற்காக கோப்புகளில் கையெழுத்திட பெற்றோர்களிடம் கூறப்பட்டது. ஆனால், நிவாரணத் தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அஜாக்கிரதையாக இருந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாணவரின் உடற்கூறு ஆய்வு கோப்புகளில் கையெழுத்திடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மாணவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவ்லர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மோஹித் என்ற மாணவர் இறந்தது வேதனைக்குரிய செய்தி. இந்த செய்தி வெளியானதில் இருந்து தமிழக முதல்வர் மூன்று முறை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாங்களும் விளக்கத்தை சொன்னோம். 2014 ஆம் ஆண்டில் இந்த பள்ளி கட்டப்பட்டது.

Advertisment

யாரும் பயன்படுத்தகூடாத, யாரும் போகக்கூடாது என்பதற்காக அங்கு கட்டுமான பொருட்கள் எல்லாம் சுவர் அருகே குவிக்க வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு வேலை செய்பவர்கள் அந்த கட்டுமான பொருட்கள் முழுமையாக எடுத்து போயிட்டார்கள். அந்த இடம் பாதுகாப்பு இடம் மாதிரி என்று நினைத்து அந்த பிள்ளைகள் உட்கார்ந்து படிக்கும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், என்னை பொறுத்தவரைக்கும் பள்ளி சார்ந்திருக்கிறவர்கள் யார் இருந்தாலும் அஜாக்கிரதையால் அவர்கள் குற்றம் செய்ததாகத் தான் கருதுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.