தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சம்பவம் நடந்த உடன் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு விரைந்து ஆய்வு செய்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து வேதனைப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், "கண்டிஷனை ஒழுங்காகப் பின்பற்றுங்கள் என்று சொன்னோமே, ஆனால் இப்போது இவ்வளவு உயிர்கள் போய்விட்டனவே" என்று கண்ணீர் வடித்தார்.
இந்நிலையில், அமைச்சரின் அழுகையை விமர்சித்த பாமக தலைவர் அன்புமணி, "அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்" என்று பேசியிருந்தார். தற்போது அன்புமணியின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், "மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி நாகரிகமற்று, கொச்சையாகப் பேசியிருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் ஒன்பது பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை நான் என்னுள் ஒருவராகக் கருதுகிறேன். நான் மக்களில் ஒருவனாக இருக்கிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.
எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல, 'எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!' தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்தத் தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்தத் தேவையில்லை என்றே கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.