அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு உறுதியளித்திருந்தது. அதில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதோடு முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த திட்டம் ஜனவரி 1ஆம் தேதி (01-01-26) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தமிழக அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தாலும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தின் வடிவத்தில் தான் இப்போது திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதில் எந்த வேறுபாடும் இல்லை, பெயரை மட்டும் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகிறார். மேலும், அரசு ஊழியர்கள் கேட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் சில சங்கங்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதை ஏற்கவில்லை என்றும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை அதிமுக நிர்மூலமாக்கியது. அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிய அதிமுக இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? 2003இல் அதிமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக கொண்ட எடப்பாடி பழனிசாமி இப்போது பதறுகிறார். தேர்தல் நெருங்குவதால் அவரின் பதற்றம் அவரது பேச்சில் வெளிப்படுகிறது. ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றாதது ஏன்?

Advertisment

ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றாதவர், ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றுவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அரசு ஊழியர்களின் மீதான் அவரின் கரிசனம், தேர்தல் நாடகம் என தெரியாதா?. எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அறுக்கமாட்டதவன் இடுப்பில் 58 அருவாளாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு திமுக அரசு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிக்காலம் குறைவாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.