ஒடிசா மாநிலத்தில் இருந்து மினி லாரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 28) டிரைவர், கள்ளக்குறிச்சி அருகே மாடூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (19), அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் (17) என்பவர்களும் இவர்கள் தியாகதுருகம் பகுதியில் விற்பனை செய்வதற்காக, ஒடிசாவில் இருந்து ரூ.10 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ 700 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
கஞ்சா கடத்திய குற்றத்திற்காக மினி லாரி மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய வழக்கில், தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாண்டியன், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 17 வயது சிறுவனை விழுப்புரம் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.