Minerals officials seize Pokkalin and lorry for Gravel theft using fake permits
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராவல், மணல், மண் உள்பட கனிம கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதனை தடுக்க கோரி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆங்காங்கே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கனிம கொள்ளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (30-12-25), கந்தர்வக்கோட்டை அருகே விராலிப்பட்டி கிராமத்தில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற போது சம்பவ இடத்தில் ஒரு பொக்கலின் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்தது. அதிகாரிகள் சென்றதும் பொக்கலின் ஓட்டுநர் சாவியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். கனிம கொள்ளை குறித்து தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன் கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகே புகாரை வாங்கி வழக்கு பதிவு செய்த போலீசார், பொக்கலினை கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று (31-12-25) கோமாபுரம் பகுதியில் கிராவல் கொள்ளை நடப்பதாக வந்த தகவலையடுத்து கனிமவளத்துறை தனி வருவாய் அலுவலர் முருகேசன் சென்ற போது அந்த வழியாக வந்த 6 யூனிட் டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது லாரியில் கிராவல் ஏற்றப்பட்டிருந்தது. ஓட்டுநரிடம் போலி பர்மிட் இருந்ததும் கண்டறியப்பட்டு டாரஸ் லாரியை கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை முணியாண்டி மகன் கரிகாலன் மீது வழக்கு பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
Follow Us