நெல்லை அருகே போதை வெறியாலும், அரிவாள் வீச்சுகளாலும் அட்டூழியப் படுத்திய இளஞ்சிறார்களை நோக்கி சீறிப்பாய்ந்த துப்பாக்கி குண்டு சம்பவம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியின் ஓரப்பகுதியில் இருக்கிறது சமத்துவபுரம். சமத்துவபுரம் சார்ந்தவர்கள் தவிர்த்து அங்கே வேறு தரப்பினரும் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பிரிவைச் சார்ந்த இரண்டு இளம் சிறார்கள்கள் (17 வயதிற்கும் குறைவானவர்கள் என்று சொல்லப்படுவதால் அவர்களின் எதிர்காலம் குறித்து பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.) வேலை வெட்டி, கல்வி இல்லாமல் விட்டேத்தியாய் அலையும் அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை பழக்கம் தொற்றியிருக்கிறது. அந்த சமத்துவபுரம் அருகில் இருக்கும் சிறிய குளத்தை தாண்டி மறுபுறம் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காலனி வீடுகள் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது.
கஞ்சா போதையில் இருக்கும் இந்த இரண்டு இளஞ்சிறார்கள் அந்த காலனி பகுதிக்கு அடிக்கடி சென்று வருவதும், அங்குள்ள ஒரு சிலரிடம் பழகியும் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த இளஞ்சிறார்களுக்கு காலனியில் உள்ள சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்தி குமாருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்தச் சூழலில் சொற்ப வயதுடைய சக்திகுமார் ஜூலை 28 அன்று வேலை முடிந்து இரவு காலனிக்குத் திரும்பியவர், தனது வீடிருக்கும் ரஸ்தாவூர் எல்லை பகுதிக்கு வந்தபோது அவரை போதையில் வழிமறித்த அந்த இரண்டு இளஞ்சிறார்களும் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அப்படியே அவரை அந்தப் பகுதியின் ஒதுக்குப்புறத்தில் உள்ள குளத்துப் பகுதிக்கு அழைத்து வந்தவர்கள், 'என்னல ஒனக்கு குசும்பு விடலயோ. நாங்க பண்ணுத ரவுடித்தனத்தையும் அடிக்கிற கஞ்சா போதையையும் பத்தி போலீசுக்கு எப்புற்றா போட்டுக் குடுக்கலாம்' என ஆத்திரத்தில் கொலை வெறியோடு கத்தியவர்கள் தங்களிடம் இருந்த அரிவாளால் அவரை தாக்கிய போது பீதியில் விலகி ஒதுங்கிய சக்திகுமாரின் காலில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து அவரை அந்த இரண்டு இளஞ்சிறார்களும் கொடூரமாகத் தாக்க முற்பட்ட போது அவர்களிடமிருந்து உயிர் பயத்தில் தப்பியோடிய சக்திகுமார் அருகிலுள்ள காலனியில் வேறொரு நபரின் வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். அப்பொழுதும் அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த போதை இளஞ்சிறார்கள் அவரை வெட்டிக் கொல்வதற்காக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/29/a4594-2025-07-29-19-51-48.jpg)
இதனிடையே அந்த வீட்டில் பதுங்கியிருந்த சக்திகுமார் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க அதைத்தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த இளஞ் சிறார்களை பிடிப்பதற்காக அங்கு விரைந்திருக்கின்றனர். ஆனால் அவர்களையும் அந்த போதை இளஞ்சிறார்கள் அரிவாளுடன் விரட்ட, சற்றும் இதை எதிர்பாராத சிறப்புப் படையைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற போலீசாருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்துத் தகவலறிந்த பாப்பாக்குடி எஸ்.ஐ. முருகன் மற்றும் இரண்டு போலீசார் அந்த இரவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள். அங்கு அரிவாள்களுடன் நின்றிருந்த அந்த இரண்டு இளஞ்சிறார்களிடம் பக்குவமாகப் பேசிய எஸ்.ஐ. முருகன், பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணுற அளவுக்கு நடந்துக்கக்கூடாது என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அந்த இரண்டு போதை இளஞ்சிறார்களும் அரிவாளால் எஸ்.ஐ.யை ஆக்ரோஷத்துடன் வெட்ட பாய்ந்திருக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பாராத அந்த எஸ்.ஐ. பயத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர் அருகிலுள்ள வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்திருக்கிறார். உடன் வந்த போலீசார் இருவரும் வேறு திசையில் தப்பியோடி இருக்கிறார்கள்.
ஆத்திரம் தீராத அந்த இரண்டு போதை இளஞ்சிறார்களும் எஸ்.ஐ.யை வெட்டுவதற்காக அவர் அடைக்கலம் புகுந்த வீட்டுக்கதவை நெட்டித் தள்ளியிருக்கிறார்கள். அது முடியாமல் போகவே அரிவாளால் அந்த வீட்டுக் கதவை வெட்டிச் சேதப்படுத்திவிட்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள். அங்கிருந்த அந்த வீட்டுப் பெண் மற்றும் அவரது மகனிடமும், எங்க எஸ்.ஐ.? என்று கத்தியவர்கள் அவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறார்கள். இதைக் கண்டு அங்கு தஞ்சம் புகுந்திருந்த எஸ்.ஐ. முருகன் அந்த பெண் மற்றும் அவரது மகன் இருவரையும் காப்பாற்றும் பொருட்டும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள முயன்ற போது அந்த எஸ்.ஐ.யை போதை சிறார்கள் வெட்டப் பாய்ந்திருக்கிறார்கள். இதில் மிரண்டு போன எஸ்.ஐ. முருகன் அங்கிருந்தோர்களின் பாதுகாப்பு மற்றும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் தற்காப்பிற்காக கடைசி நேரத்தில் தான் வைத்திருந்த அலுவல் துப்பாக்கியை எடுத்து இளஞ்சிறார்களை நோக்கி சுட்டிருக்கிறார். இதனால் அந்த போதை சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதில் எஸ்.ஐ. முருகன் சுட்டதில் அந்த இரண்டு இளஞ்சிறார்களில் ஒருவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/29/a4597-2025-07-29-19-53-33.jpg)
இந்நிலையில் போதை சிறார்களிடமிருந்து தப்பியோடிய இரண்டு போலீசாரும் காவல் நிலையத்திற்கு இது பற்றிய தகவலைக் கொடுக்க, அங்கிருந்து மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள். அதுசமயம் ஏற்கனவே இளஞ்சிறார்களின் அரிவாளால் தாக்குதலுக்குள்ளாகி காயத்துடன் தப்பிய சக்திகுமார் ஒரு வீட்டிற்குள் அடைக்கலம் தேடி மறைந்திருந்ததையறிந்த சிறப்பு போலீஸ் படையினர் அவரை மீட்டு மருத்துமனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் தேடுதல் வேட்டையில் எஸ்.ஐ.யால் சுடப்பட்டு காயம் அடைந்த அந்த போதை இளஞ்சிறாரையும் அவருடன் வந்த மற்றொரு இளஞ்சிறாரையும் பிடித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்த நடு இரவிலும் அந்தப் பகுதியில் பரபரப்பையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது அந்த போதை இளஞ்சிறார்களின் அட்ராசிட்டியும் துப்பாக்கிச் சூடு சம்பவமும்.
பிடிபட்ட அந்த இரண்டு இளஞ்சிறார்கள் மீது ஏற்கனவே பாப்பாக்குடி காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசியது, கொலை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழான வழக்கு உள்ளிட்ட எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
காயமடைந்த எஸ்.ஐ. முருகன், சிறப்புப் படைக் காவலர் ரஞ்சித், குண்டு காயம் பட்ட இளஞ்சிறார் உள்ளிட்ட மூவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பதற்றச் சூழல் காரணமாக அங்கு ஆயுதப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக ரஸ்தாவூர் பகுதியில் அம்பை டி.எஸ்.பி. சதீஷ்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
புரையோடிப் போயிருக்கும் போதைக் கலாச்சாரம் வயது வித்தியாசம் பாராமல் ஆக்கிரமித்திருப்பது ஆபத்தின் அறிகுறி.