திருவண்ணாமலையில் ஒரே நாள் நள்ளிரவில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை நகரப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராம். இவருக்கும் காந்தி நகர் பைபாஸ் சாலையில் ஆட்டோ நிறுத்தும் இடத்தில் உள்ள சில நபர்களுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் ராம் சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்ட நிலையில்  கிடந்த ராமின் உடலைக் கைப்பற்றி திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கொலைக்கு தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை அண்ணா நகர்ப் பகுதியில் நேற்று இரவு 11 ஆம் வகுப்பு படிக்கும் சுனில் என்ற சிறுவன் சமூக வலைத்தளமான இன்ஸ்டா மூலம் அறிமுகமான ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த கோட்டைமுத்து என்ற நபரை சந்தித்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு கோட்டைமூத்து சுனிலை கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். இதில் சுனில் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் திருவண்ணாமலை காவல்துறையினர் சுனிலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்படி ஒரே நாள் இரவு வேளையில் இருவர் திருவண்ணாமலை நகரப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.