MH Jawahirullah's message of greetings on Women's Day
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான அந்த நாளில், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (08-03-26) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மகளிர் தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவன் அதை அறியாமைக் கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ அதனை இழிவாகக் கருதவில்லையோ அதைக் காட்டிலும் ஆண் மக்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லையோ அத்தகைய மனிதனை இறைவன் சுவனத்தில் நுழையச் செய்வான் என்பது நபிகளாரின் வாக்கு.
‘அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை என்று (திருக்குர்ஆன் 2:187) இறைமறையும் மகளிரின் மேன்மையை உயர்த்தி உரைக்கிறது. நம் உறவின் அனைத்துப் பரிணாமங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெண்ணினத்தைப் போற்றிப் பாதுகாப்போம். பெண் என்பது பலவீனம் அல்ல. அது ஒரு மகத்தான சக்தி. உங்களை யாராவது தடுக்க நினைத்தால், உங்கள் வெற்றியின் மூலம் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது காலத்தின் தேவை. அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்துப் போற்றவும் பாரபட்சம் இல்லாமலும் அதே வேளையில் மகளிர் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்திட அனைவரும் உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us