தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. 11 பேர் அடங்கிய அக்குழு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து கருத்துக்களை கேட்டுள்ளது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்கள். அதில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று திட்டமிட்ட எம்ஜிஆரின் கனவு நிறைவேறாமல் போனது. நீண்டகால காத்திருப்புக்கு பிறகு அதற்கு  கைகொடுக்கும் படியாக திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்ட்ராவில் நாக்பூரும், கர்நாடகாவில் பெலாகாவியும் இரண்டாம் தலைநகராக உள்ளன. அதேபோல் ஜம்மு மற்றும் ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் குளிர்கால மற்றும் கோடைகால தலைநகரங்கள் என தனித்தனியே உள்ளன. தமிழகத்திலும் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியை தலைநகராக கொண்டுவரும் திருச்சி மக்களின் கனவு நிறைவேறுமா என்பது பொறுத்திருந்தே தெரியும். 

Advertisment