mettur dam
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபிணி, கே.ஆர்.எஸ் அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இந்த காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை நான்குமுறை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நேற்று மாலைக்குள் மீண்டும் மேட்டூர் அணை நிரப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், மேட்டூர் அணையை சுற்றியுள்ள காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று ஐந்தாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 117 அடியாக இருந்த நிலையில், இன்று முழு கொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளது.