சென்னை செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் இன்று (15.08.2025) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 30 டன் எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸ் இணைக்கக்கூடிய பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராட்சத கிரேன் மூலமாக அதிக எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸினை மேலே தூக்கும் போது எதிர்பாராத விதமாக கிரேன் பெல்ட் அறுந்து கீழே விழுந்தது.
அப்போது கிரேன் பாக்ஸ் உடன் சென்ற இரு தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். இதில் ஜார்கண்டை சேர்ந்த பிக்கி குமார் பிஸ்வால் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் மற்றொரு தொழிலாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெட்ரோ மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கட்டுமான பணியின் போது கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி (12.06.2025) விபத்து ஏற்பட்டது. மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே வைக்கக்கூடிய 2 குறுக்கு தூண்கள் சரிந்து விழுந்தன. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.