தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது.

Advertisment

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து காலை 09:45 மணிக்குச் சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ராஜமுந்திரியில் இருந்து மதியம் 01:35 மணிக்குச் சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வர உள்ள சில விமானங்களும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போதைய நிலவரப்படி மசூலிப்பட்டினத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோன்தா  புயல்  காக்கிநாடாவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு தீவிரப் புயலாக மசூலிப்பட்டினம்-கலங்கப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.