தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

இதனால், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழ்நாடு, புதுச்சேரி வழியே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவை ஒட்டியுள்ள திருவள்ளூர், பொன்னேரி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.