தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (24-11-25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெற்று, நவம்பர் 26 அன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் உருவானால் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்தபடி அதற்கு ‘சென்யார்’ (Senyar) என்று பெயர் சூட்டப்படும். இதன் தாக்கத்தால் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்திய கடல் பகுதிகளில் 3 சுழற்சிகள் நிலவுகின்றன. 3 சுழற்சிகள் தொடர்பில் இருப்பதால் வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. இன்று முதல் நாளை 8:30 மணி வரை தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்டுள்ளது. தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாளை 25ஆம் தேதி தென்கடலோர மாவட்டங்களான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைதரப்பட்டுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி, தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  கனமழை எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களில், இடியுடன் கூடிய மழை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. இன்றைய தேதியில் வளிமண்டலத்திலே இருக்கின்ற சுழற்சிகளின் மாற்றங்களை கண்காணித்து அடுத்து வரும் நாட்களுக்கான மழை குறித்து இந்த எச்சரிக்கை தரப்படுகிறது. நாளை எப்படி அது மாறும் அந்த மாற்றங்களுக்கு, ஏற்றார் போல இந்த கனமழை எச்சரிக்கை குறியீடு செய்யும் மாவட்டங்கள் சிறிது மாறும் வாய்ப்பு உண்டு. 

28ஆம் தேதிக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு மிக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 29 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களான, ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டிருக்கிறது. 30-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வலைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் லச்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளுக்கு இன்றிலிருந்து 29 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார். 

Advertisment