தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (24.10.2025) நண்பகல் 01.50 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நேற்று (23.10.2025) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (24.10.2025) காலை 05.30 மணி அளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இன்று 08:30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றமுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகின்ற 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
இன்று (24-10-2025)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (25-10-2025) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால், அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்ந்தா (Montha) என்ற பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/rain-2025-10-24-14-40-34.jpg)