வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (03.12.2025) அதிகாலை 02.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு மேலே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிட்வா சூறாவளி புயல்) கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் மெதுவாக தென்-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (02.12. 2025) இரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது (அட்சரேகை 12.1°N மற்றும் தீர்க்கரேகை 80.2°E க்கு அருகில்,) புதுச்சேரியில் இருந்து சுமார் 40 கி.மீ. கிழக்கு - வடகிழக்கிலும், சென்னையில் இருந்து 100 கி.மீ. தெற்கிலும், கடலூரில் இருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், காரைக்காலில் இருந்து 140 கி.மீ. வடக்கு - வடகிழக்கிலும் மற்றும் நெல்லூரில் இருந்து 260 கி.மீ. தெற்கிலும் அமைந்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிக்கும் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 25 கி.மீ. ஆகும். இது மெதுவாக தென்மேற்கு திசையில் வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் ஒரு (நன்கு குறிக்கப்பட்ட) குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. இந்த அமைப்பானது சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் (DWR) மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/03122025-2025-12-03-07-35-14.jpg)