தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோந்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் கடற்பரப்பை ஒட்டிருக்கக்கூடிய இடங்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. அங்கிருந்து தொடர்ந்து நகரக்கூடிய திசை என்பது மேற்கு வடமேற்கு திசையில் இருந்து குறிப்பாக நேராக சென்னைக்கு நேர் தென்கிழக்கு திசையில் நிலைகொள்ளும் எனக் கணிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை (27.10.2025) காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மேலும் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி (28.10.2025 - செவ்வாய்க்கிழமை) காலை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
எனவே அன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அருகே உள்ள மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். இந்த புயலின் காரணமாகத் தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அதே சமயம் புயல் காரணமாக மழைக்கான வாய்ப்புகள் தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us