தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மலக்கா ஜலசந்தியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (25.11.2025) இரவு 11:30 மணி அளவில் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ. வேகத்தில் அதே பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவிலிருந்து 2600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இருப்பினும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26.11.2025) மதியத்திற்குள் புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘சென்யார் (Senyar)’ என்ற பெயர் சூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த புயல் மீண்டும் நாளை (27.11.29025) தாழ்வு மண்டலமாக வலுக் குறையும். இந்த சென்னியார் புயல் தமிழகத்திலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு மழைக்கான பாதிப்பு கிடையாது.
அதே சமயம், குமரிக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் அழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேலும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும். மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us