தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (18.11.2025) காலை 07.10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளிலும் காலை 10 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (18.11.2025) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார்.
அதே போன்று கனமழை காரணமாகக் கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.11.2025) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த இரு மாவட்டங்களில் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us