Advertisment

“வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

chennai-rmc

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. 

Advertisment

இதன் காரணமாக இன்று (24.10.2025) காலை 05:30 மணிக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்கரையை ஒட்டி உருவாகி இருப்பதன் காரணமாக ஆந்திராவில் உள்ள பகுதிகளுக்கு அதிகப்படியான மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

மற்றொருபுறம் காவிரி ஆற்றின்  நீர்பிடிப்பு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. அதாவது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

rain chennai meteorological department weather bay of bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe