தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று (16.10.2025) ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக விலகி வடகிழக்கு பருவமழை இன்று (16.10.2025) முதல் தொடங்கவுள்ளது. எனவே தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சியால் வரும் 19 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (17.10.2025) 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.