“யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் பண்ணு... போலீஸ்காரங்க டெய்லி வந்து வாங்கிட்டு போறாங்க...” என்று பழக்கடையில் எடை மோசடி செய்த வியாபாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2025) காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றிருந்தார். காய்கறிகளை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில், சந்தை அருகே மினி டோர் ஆட்டோவில் ஆப்பிள் விற்பனை செய்து கொண்டிருந்த கடையில், 2 கிலோ ஆப்பிள் வாங்கினார். ஆனால், வாங்கிய ஆப்பிள் எடை குறைவாக இருப்பதாக சந்தேகித்து, அருகிலுள்ள மற்றொரு கடையில் எடையைச் சோதித்தபோது, அது 1.8 கிலோ (1,800 கிராம்) மட்டுமே இருந்தது.
இதையடுத்து, சௌந்தர் மீண்டும் பழம் வாங்கிய கடைக்குச் சென்று எடையைச் சோதித்தார். அங்கு, கடையின் எடை இயந்திரம் 2 கிலோவைக் காட்டியது. இந்த வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பியபோது, கடை ஊழியர் ஒருவர் எடை இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினார். உடனே, எடை 1.855 கிலோவாகக் (1,855 கிராம்) காட்டியது. இதன் மூலம், ஒரு கிலோவுக்கு 100 கிராம் குறைத்து, 2 கிலோவுக்கு 200 கிராம் குறைத்து, மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து கடை ஊழியரிடம் சௌந்தர் கேள்வி எழுப்பியபோது, “யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் பண்ணு, போலீஸ்காரங்க டெய்லி வந்து வாங்கிட்டு போறாங்க.. எல்லாருகும் தெரிஞ்சுதான் நடக்குது” என்று வாக்குவாதம் செய்தார். இதனை சௌந்தர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது.
இச்சம்பவம், உழவர் சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் எடை மோசடிகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. பொதுமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. மேலும், வணிகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்த தொடர் ஆய்வுகள் நடத்தி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.