கள்ளக்குறிச்சி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது உலகங்காத்தான் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் அதே பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (26.6.2025) ராஜு தனது ஸ்கூட்டியை கடை முன் நிறுத்திவிட்டு உள்ளே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், கடை முன் நிறுத்தியிருந்த ராஜுவின் ஸ்கூட்டியை டூப்ளிகேட் சாவி கொண்டு எடுத்துச் செல்ல முயன்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு, "யார் நீ? எதற்காக என் ஸ்கூட்டியை எடுக்கிறாய்?" என்று கேட்டார். ஆனால், சற்றும் அலட்டிக்கொள்ளாத அந்த இளைஞர், "வேறு ஒருவர் எடுத்து வரச் சொன்னார். அதனால்தான் இந்த ஸ்கூட்டியை எடுக்க வந்தேன்," என்று பதில் கூறினார். இதைக் கேட்டு திகைத்துப் போன ஸ்கூட்டியின் உரிமையாளர் ராஜு, அந்த இளைஞரைப் பிடித்து கடையிலேயே உட்கார வைத்தார். பின்னர், ஸ்கூட்டியைத் திருட வந்த இளைஞர், கடையில் இருந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, ஒவ்வொருவரின் காலிலும் விழுந்தார்.

அந்த நேரத்தில், டீக்கடைக்கு வந்த உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஸ்கூட்டியைத் திருட வந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் "ஐயோ... அம்மா..." என்று கத்திக்கொண்டு அந்த இளைஞர் தப்பியோட முயன்றார். ஆனால், அவரை மடக்கிப்பிடித்து இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், இரு சக்கர வாகனத்தைத் திருட வந்த நபர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்றும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அதன்பின், அங்கு வந்த அவரது உறவினர் ஒருவர் இளைஞரின் நிலையை எடுத்துக்கூறி, அவரை டீக்கடையிலிருந்து அழைத்துச் சென்றார்.

Advertisment

மனநலம் பாதிக்கப்பட்டவரைத் திருடன் என்று நினைத்து இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.