கோப்பு படம்
இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
‘’இன்றைய தினம் திமுக அரசு 2026 - 27 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்த, திராவிட மாடல் என்ற பெயரால் நடத்தப்பட்ட ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை நாங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாபெரும் காதுகுத்து விழா அழைப்பிதழை அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அளித்திருக்கிறோம். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்த அளவுக்கு இந்த அரசு மக்களுக்கு காது குத்தியது என்பதை நாட்டு மக்களும் அறியவேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழை உங்களிடம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது உங்கள் கடமை.
2021-ம் ஆண்டு திமுக சட்டமன்றத் தேர்தலின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதுவரை நான்கில் ஒரு அறிவிப்பைக்கூட நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமான பல அறிவிப்புகள். இன்றைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு மாறாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைத்தான் அறிவித்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றிவிட்டது.
அதோடு பல துறைகளில் பணிபுரிகின்ற அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழி அளித்தார்கள். சத்துணவு அமைப்பாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். நிறைவேற்றவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். நிறைவேற்றவில்லை. செவிலியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. இப்படி பல துறைகளில் இருக்கின்ற அலுவலர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எல்லோருமே போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகமே போராட்டக்களமாக இன்றைக்கு மாறியிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாக இருக்கிறதே தவிர, உருப்படியாக எதுவும் இல்லை.
2025-26 நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் 2.58 லட்சம் கோடி என்று எதிர்பார்த்த நிலையில், திருத்திய மதிப்பீட்டின்படி மாநிலத்தின் சொந்த வருவாய் 2.32 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது சுமார் 26 ஆயிரம் கோடி வருவாய் குறைந்துள்ளது.
மத்திய அரசின் மீது குற்றம் சாட்டும் நிதியமைச்சர் மாநிலத்தின் சொந்த வருவாய் 26 ஆயிரம் கோடி குறைவு பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லை. 2025-26-ம் ஆண்டு வரவு செலவு 66,753 கோடி செலவிடப்படும் என்று கணித்த நிலையில், திருத்திய மதிப்பீட்டில் 51,442 கோடியாக குறைந்துள்ளதற்கு நிதியமைச்சர் எந்த காரணமும் விளக்கவில்லை.
நிதிப்பற்றாக்குறை 2024-25-ல் 96 ஆயிரம் கோடி என்று கணித்த நிலையில் இந்த கணக்கின்படி அது 1 லட்சத்து 1 ஆயிரம் கோடியாக, அதாவது 5 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. 2025-26-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக நிதிப் பற்றக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் திருத்திய மதிப்பீட்டில் இது 1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது நிதிப் பற்றக்குறை சுமார் 16 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது.
2026-27 இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 22 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்ட நிலையில் திருத்திய மதிப்பீட்டில் கண்டிப்பாக இது உயரும். 2026-27ல் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி பற்றக்குறை என்று சொல்கிறார்கள். திருத்தி அமைக்கும்போது இது இன்னும் உயரும். இவ்வாறு பற்றாக்குறை உயர்ந்துகொண்டே சென்றால் அதை ஈடுசெய்ய மக்களின் வரிச்சுமை மற்றும் கடன் வாங்கும் அளவு கூடும். இது மாநில வளர்சிக்கு உகந்ததல்ல.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் ரகுராம் ராஜன் தலைமையில் நிதி மேலாண்மைக் குழு அமைத்து மாநில நிதி நிலைமை சீர்செய்யப்படும் என்று சொன்னார்கள். இதற்காக நிபுணர் குழுவும் அமைத்தார்கள். நிபுணர் குழு அமைத்த பிறகுதான் அதிக கடன் வாங்கியிருக்கிறார்கள். மாநிலத்தின் கடன் உயர்ந்தும், மக்கள் மீது கடன் மற்றும் வரிச்சுமை அதிகரித்து உள்ளது. இந்த அரசுக்கு சாதனை என்று எதுவும் இல்லை. எனவேதான் ஸ்டாலினை பொம்மை முதலமைச்சர் என்றும், நிதி நிர்வாகத் திறனற்ற அரசு என்றும் குற்றம் சாட்டுகிறோம்.
இன்றைய மாநில நிதிலை அறிக்கையிலும், வேளாண்துறை நிதிநிலை அறிக்கையிலும் சுமார் 5 மணிநேரம் 2 அமைச்சர்களும் உரை நிகழ்த்தினார்களே தவிர வரவு செலவுத் திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த 5 ஆண்டுகாலத்தில் இந்த அரசு என்ன பணிகளை செய்தார்களோ, அதை வரிசைப்படுத்தி, அடுக்கு வார்த்தைகளுக்கு அழகுகூட்டி சாதனை என்று படித்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இன்றைக்கு வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் பல துறைகள் அடக்கி வேளாண் பட்ஜெட். பால்வளத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத் துறை, கிராமப்புறச் சாலைகள் இப்படி பல துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த அமைச்சர் மானியக் கோரிக்கை வரும்போது ஒரு கருத்தைச் சொல்லுவார்., இதையெல்லாம் உள்ளடக்கித்தான் வேளாண்மைத் துறை. வேளாண்மைத் துறை என்பது ஒரு தனி துறையாக இருக்கவேண்டும். அதில் நீர்வளத் துறையை சேர்த்துக்கொண்டனர். இப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்தான் வேளாண் பட்ஜெட் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவின் நிதிநிலை அறிக்கை அத்திப்பழம் போல உள்ளது. வெளியே அழகாக இருக்கும். புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் அத்திப்பழமாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது..’’ என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி : ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டமன்ற நிகழ்ச்சி நடைபெறும் என்று சொன்னார்களே...?
இபிஎஸ் : இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம் என்று இருந்தேன். நீங்களே கேட்டுவிட்டீர்கள். இது போன்று ஒன்றிரண்டு அல்ல 525 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். அதில் நான்கில் ஒரு பகுதியைத் தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். எஞ்சிய அறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டதற்கும் பதில் இல்லை. \ஆனால் முதல்வரும், திமுக அமைச்சர்களும் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். அத்தனையும் பொய், நீங்கள் கேட்டது போல் ஆண்டுக்கு நூறு நாள்கள் சட்டமன்ற நிகழ்ச்சி நடைபெறும் என்று சொன்னார்கள், ஆனால், 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமே 140 நாட்கள் தான் சட்டமன்றம் நடந்திருக்கிறது என்று கருதுகிறேன்.
கேள்வி: தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்களே, கறிகோழி விவசாயிகள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் என போராடுகிறார்கள், கறிக்கோழி விவசாயிகள் போராட்டம் முடியவில்லை... சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு முறையும் வாக்குறுதி கொடுக்கிறார்கள், பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். எதிர்க்கட்சி சார்பாக போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு என்ன ஆதரவு தரப்போகிறீர்கள்..?
இபிஎஸ் : நான் ஏற்கனவே இது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இந்த அரசு, கறிக்கோழி வளர்க்கின்ற விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. கறிக்கோழி கொள்முதல் செய்கிற நிறுவனத்திற்கு தான் இவர்கள் உதவியாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் நடத்தியவர்களை கைது செய்திருக்கிறார்கள். இப்போது தான் அவர்கள் ஜாமீனில் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சாதாரண விவசாயிகள். இது அவர்களின் வாழ்வாதாரம். கறிக்கோழி வளர்த்துத் தான் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. இன்று கறிக்கோழி வளர்ப்பதற்கான செலவு அதிகரித்து விட்டது. அதை புள்ளி விவரமாக கொடுக்கிறார்கள். அதற்கு உண்டான தொகையை அதிகரித்துத் தான் கேட்கிறார்கள், அதைக்கூட இந்த அரசு சரியான முறையில் நிறுவனத்தை அணுகி, கறிக்கோழி வளர்க்கிறவர்களையும் அணுகி பேச்சுவார்ததை நடத்தி சுமூகமாக முடித்திருக்க வேண்டும். ஆனால் அதை பற்றி எல்லாம் இந்த அரசுக்கு கவலையே கிடையாது. எதைப்பற்றியும் கவலை கிடையாது, எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் கவலைப்படுவதில்லை. விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களைப் பற்றியும் கவலைப்படாத அரசு திமுக தான்.
கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்று சொல்லி இருந்தார்கள், ஆனால் பகுதி நேரமாகத்தான் நேரலை செய்கிறார்களே..?
இபிஎஸ் : அதாவது நான் பேசுவது மட்டும் வராது, அவர்கள் பேசினால் மட்டும் லிங்க வரும். நான் என்ன கேள்வி கேட்கிறேனோ அதை ஒளிப்பரப்பினால் தான், அவர்கள் சொல்லும் பதில் சரியா, தவறா என்று, மக்கள் புரிந்து கொள்வார்கள். பல முறை சட்டமன்றத்தில் பேசி இருக்கிறோம். நீதிமன்றம் வரையும் போனோம். அங்கேயும், இதுவரை பெண்டிங்கில் தான் இருக்கிறது. இதற்கு எல்லாம் விரைவில் விடிவு காலம் வரும். இன்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இன்னும் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் என்பதைத் தீர்மானிப்பார்கள். அந்த நாட்களுடன் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். மீண்டும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இணைந்து வலுவான கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
Follow Us