தை பிறந்தால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தமிழ்நாட்டில் எங்கும் மகிழ்ச்சி பிறக்கிறது. அதனால்தான் தை பிறந்தால் மாதம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வெளியூர், வெளிநாடுகள் சென்றவர்கள் கூட தை திருநாளை கொண்டாட சொந்த ஊருக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்கின்றனர். விதவிதமான வித்தியாசமான போட்டிகளோடு கிராமங்கள் களைகட்டி இருக்கிறது.

Advertisment

இப்படி ஒரு நிகழ்வு தான் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் பரமநகர் பகுதியில் நடக்கிறது. இப்பகுதி மக்கள் கொண்டாடும் கொப்பித் திருவிழா காண்போரை கவர்ந்து இழுக்கிறது. உழவர் தினத்தின் காலையில் பரமநகரில் ஒரு பகுதி மக்கள் காலையில் மஞ்சள் தண்ணீர்க் குடங்களை ஊர்வலமாக தூக்கிச் சென்று செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அன்று மாலையில் முதல் நாள் மாட்டுக் கிடையில் வைக்கப்பட்ட பொங்கலை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தலை வாழை இலையில் 3 படையல்  வைத்து பூஜைக்கு, 32 சாணப் பிள்ளையார், பூசணிப்பூ என தயார் நிலையில் இருக்க முதலில் கோயில் பூசாரி வீட்டில் தொடங்கி குடியிருப்பு பெண்கள் கூடி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் படையல் போடும் இடத்தை சுற்றி வந்து கும்மியடிக்க ஆண்கள் வீடுவீடாக கோலாட்டமாட பூசாரி பூஜை செய்து தேங்காய் உடைக்க ஒரு ஓலை கூடையில் 32 சாணப் பிள்ளையார்கள், மற்றொரு ஓலை கூடையில் படையல் பொருட்களை அள்ளி வைத்து அந்த வீட்டில் பெண்கள் ஊரோடு புறப்படுகின்றனர்.

Advertisment

இப்படி அந்த குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கும்மி கோலாட்டத்துடன் எடுக்கப்படும் ஓலைக் கூடைகளுடன் பெண்கள் ஊர்வலமாக செல்வ விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து படையல் செய்வதை கொப்பி திருவிழா என்கின்றனர் கிராம மக்கள். இந்த கொப்பித் திருவிழாவில், பெண்கள் கும்மியடித்தாலும் அந்தப் பகுதி ஆண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என பாகுபாடு இல்லாமல் கோலாட்டம் ஆடுவது மிகச் சிறப்பு. இருவர் கோலாட்டம் அடிக்கும் போதே வேகமாக திரும்பி மற்றவருடன் அடிப்பது வியப்பானது. 

இந்த கோலாட்டத்தில் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் நாட்டுப்புற புலவர்கள் சிலர் கிராமத்தின் சிறப்பு, விவசாயத்தின் சிறப்புகளை சொல்லும் பாடல்களை பாட அந்தப் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு சிலரை பாடவைத்து நாட்டுப்புற இசையுடன் அப்போதைய டேப் ரெக்கார்டரில் பதிவு செய்திருப்பதை இன்றளவும் பயன்படுத்தி அந்த பாடல்களுக்கு ஏற்ப கோலாட்டம் ஆடுகின்றனர். இந்த ஆண்களின் கோலாட்டத்தைக் காண வடகாடு சுற்றுவட்டார கிராமங்களளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்க்கின்றனர்.

Advertisment