உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலை கிராமத்தில் நடைபெற்ற பழங்குடியினர் கலாச்சார கலைத் திருவிழாவில் ஆண்கள் திரளாக கூடி கும்மிப்பாட்டு பாடி சேர்வையாட்டம் ஆடினர்.

உலக பழங்குடியினர் தினமான ஆகஸ்ட் 9ம் தேதி தமிழ்நாடு மலையாளி பேரவை சார்பில் ஆண்டு தோறும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏதாவது ஒரு மலை கிராம ஊராட்சியை தேர்ந்தெடுத்து பழங்குடியினர் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கோனூர் மலை கிராமத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கலாச்சார கலை விழா நடைபெற்றது.

இந்த விழாவில், மாநிலத் தலைவர் கோவிந்தன் உட்பட வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மலைவாழ் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்ற அடையாளங்களை பாதுகாத்தல், சிறுகுறு தானிய விவசாயிகளை ஊக்குவித்தல், சுயத்தொழில் தொடங்குவது, வன உரிமைகளை பாதுகாப்பது போன்றவை விவாதிக்கப்பட்டது.

பின்னர், மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தின் கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சேர்வையாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் கும்மி பாட்டு பாடி சேர்வையாட்டம் ஆடியது அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டு பெற்றனர்.