புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வடகாடு அ. வெங்கடாசலம் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பெண் வேடமணிந்து வந்தவர்ளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரிய இடத்து நிலப் பிரச்சனையால் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்பட்டாலும் பஞ்சாயத்து பேசியதால் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த கொலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அதிமுகவினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினரும் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதே போல அவர் சார்ந்துள்ள சமூக சங்கங்களும் திரளாக வந்து மரியாதை செய்து வருகின்றனர். அதே போல நேற்று (07.10.2025) வெங்கடாசலத்தின் 15வது நினைவு நாளில் திமுக சார்பில் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா உள்பட பலர் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்தனர். அதே போல அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் உள்பட பலரும் வந்திருந்தனர்.
மேலும் சிங்கத் தமிழர் முன்னேற்றக்கழகம் ஆர்.வி. பரதன் தலைமையில் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பேரணியாக வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். இந்த பேரணியின் போது ஆம்புலன்ஸ் அவசரமாக வர உடனே அந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுங்கள் என்று ஒலி பெருக்கியில் கூறிய வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதே போல, தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமையில் ஏராளமானோர் அமைதிப் பேரணியாக வந்து மரியாதை செலுத்தினர். இதே போல பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்பட பல அரசியல் கட்சினரும், சமூக சங்கங்களும் மரியாதை செய்தனர். அதே சமயம் வெளியூர்களில் இருந்து வருவோர்க்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.