பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மறுபுறம், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது. இதில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று விழுப்புரம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்துகொண்டுள்ளார். மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியின் செயல்தலைவர் பதவியை விட்டு நீக்கிவிட்டு மகள் காந்திமதிக்குப் அந்த பொறுப்பை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமதாஸ் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த பாமக தொண்டர்கள், “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை; அய்யா முடிவே இறுதியானது!” என்று பதாகை ஏந்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.