மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான அமர்வில் இன்று (13.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் வாதிடுகையில், “மேகதாது அணியின் திட்ட வரைவுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், “மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
அதோடு இந்த அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது. காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. எனவே புதிய அணை கட்ட தேவையில்லை. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் 80 டி.எம்.சி. நீர் பாதிக்கப்படும். அதாவது தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 117 டி.எம்.சி. நீரை ஆண்டு முழுவதும் வழங்கப்பட வேண்டும். எனவே அணை கட்டுவதன் மூலம் கர்நாடகா அதனைத் தடுக்க பார்க்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்குப் புதுச்சேரி மற்றும் கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் அணை கட்டுமானத்திற்குத் திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் வாதங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்பக் கட்டமானது. எனவே டி.பி.ஆர். தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்தில் வழங்கப்படும் போது அதனை இறுதி செய்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/judgement-2025-11-13-15-20-10.jpg)
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு சார்பில் பிலிகுண்டுலுவில் வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உரிய முறையில் செயல்படுத்தவில்லை என்றால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரள அரசுகள் நடத்தலாம். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் மேகதாது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/sc-1-2025-11-13-15-19-39.jpg)