தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று (26/07/2025)  தூத்துக்குடிக்கு வரும் மோடி, பின்னர் அங்கிருந்து திருச்சி வர இருக்கிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்காக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க திருச்சிக்கு காரில் புறப்பட்டுள்ளார். திருச்சியில் மோடியை சந்தித்த பிறகு மீண்டும் சேலத்திற்கு வந்து ஓய்வெடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை சில முக்கிய கோரிக்கைகள் இருக்க போகிறது என்று கூறப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி அறிவித்த நொடியில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. எடப்பாடி பழனிசாமியை கூட்டணி அறிமுக நிகழ்ச்சியில் பேச விடவில்லை; எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா கூறவில்லை; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் ஏற்படும் என பல சர்ச்சைகள் எடப்பாடியை சுற்றி வருகிறது. ஆனாலும் 'தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணியில் பங்கு தர நாங்கள் ஏமாளிகள் அல்ல' என எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார்.

இதனால் மோடி-எடப்பாடி சந்திப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற கோரிக்கையை எடப்பாடி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.