எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளி  மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 32 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க எம்.பி.பி.எஸ் இடங்களும் ஒரு மாணவருக்கு பிடிஎஸ் இடமும் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டுகளில் +2 படித்து பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். அதனால் மொத்த இதுவரை 33 மாணவ, மாணவிகள் பற்றிய விபரங்களே தெரிய வந்துள்ளது. இன்னும் பலருக்கு சீட்டு கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல கடந்த ஆண்டு 7.5% உள இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 42 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து படித்து வருகின்றனர். மாதிரிப் பள்ளியில் ஒருவர் கூட இல்லை. நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை தயார் செய்யும் விதமாக மாவட்டந்தோறும் அரசு மாதிரிப் பள்ளிகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே சேர்த்து ஒரு பாடத்திற்கு 2 ஆசிரியர்கள் வீதம் பாடம் நடத்தி வருகின்றனர். இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் கைக்குறிச்சியில் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கும் ஒரு பாடத்திற்கு 2 ஆசிரியர்கள் வீதம் சிறப்பு வகுப்புகளும் நீட் பயிற்சிகளும் நடத்தப்பட்டது. ஆனால் ஒரு மாணவர் கூட நீட்டில் தேர்வாகி மருத்துவம் படிக்க செல்லவில்லை என்ற தகவலும் பரவி வருகிறது.