ஜனவரி 2ஆம் தேதி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கொடியசைத்து நடைபயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
திருச்சியில் இருந்து மதுரை வரை சுமார் 190 கி.மீ. தூரம் கொண்ட இந்த 11 நாட்கள் நடைபயணம், ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. போதைப்பொருள், மது ஆகியவற்றுக்கு எதிராகவும், சாதி - மத பேதங்களை ஒழிப்பதற்காகவும், சமத்துவம், மனிதநேயம், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. “பெரியார்-அண்ணா மண்ணிலே சாதியும் இல்லை மதமும் இல்லை... வேண்டும் வேண்டும் சமத்துவம் வேண்டும்” என்ற முழக்கங்கள் வழிநெடுக ஒலிக்கின்றன.
தமிழர் நலனுக்காக சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் வைகோ, 06ஆம் தேதி அன்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பட்டியில் நடைபயணத்தைத் தொடங்கி மதியம் கல்லுப்பட்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார். தனது 82 வயதிலும் 28 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்புடன் வைகோ நடந்து வந்தது தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதன்பின் மதிய உணவு இடைவேளையில் கல்லுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் மேடை அரங்கில் சற்று இளைப்பாற கட்டாந்தரையில் எந்த பகட்டும், பரபரப்பும் இல்லாமல் படுத்து வைகோ ஓய்வெடுத்துக்கொண்டார். இது அவரது எளிமையையும் தன்னடக்கத்தையும் மீண்டும் நிரூபிக்கிறது.
இதுவரை ஐந்து நாட்களில் கணிசமான தூரத்தைக் கடந்துள்ள வைகோ, உடல்நலத்தை மீறியும் தமிழர் நலனுக்காக இந்தப் பயணத்தைத் தொடர்கிறார் – இது அவரது அயராத போராட்ட குணத்தை காட்டுவதாக அவருடன் பயணிக்கும் சக தொண்டர்கள் பெருமிதம் அடைகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/vaiko-rest-2026-01-06-19-21-37.jpg)