மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை தொடங்கியது. 

Advertisment

இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த துவக்க விழாவை காங்கிரஸ் புறக்கணித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் கே.என்.நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

Advertisment

இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்துத்துவ ஆதிக்க சக்தியால் மற்றும் சனாதன கூட்டம் தமிழகத்தின் சமய நல்லிணக்கம் பாழ்பட்டு போகுமோ என்ற அச்சத்தக்க சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். சாதியின் பெயரால் மோதல், மதத்தின் பெயரால் ரத்த களரி என உருவாக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சங்க காலத்தில் இங்கு சாதிகள் கிடையாது. ஒற்றுமையின் இருப்பிடமாக தமிழகம் இருக்கிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போதும், வடக்கில் ரத்த களறிகள் நடந்த போதும், இந்து முஸ்லிம் மோதல்கள் வடக்கில் நடந்த போதும் இங்கு சமய நல்லிணக்கத்தை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஏற்படுத்தினார்கள்.

அத்தகைய சமய நல்லிணக்கத்தை, யாதும் ஊரே யாவரும் கேளிரி என்ற கோட்பாட்டுக்கு ஏற்ற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நெறிகளுக்கு ஏற்ற இந்த மத பூசல்களுக்கும் சமய சண்டைகளுக்கும் இங்கு இடமில்லை. இதை நிலைநாட்டுவதற்காக அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக நான் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் பொற்காலமாக அமைந்திருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு காலம் இது பொற்காலமாக தொடர வேண்டும் எனவே  இந்த தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதனுடைய கூட்டணி கட்சிகளையும் மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் என்பதை தான் திரழுகிற மக்களை எங்கே கண்டாலும் அவர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள்.

Advertisment

பச்சிளம் குழந்தைகளும் பாலகர்களும் பசியோடும் பட்டினியோடும் பரிதவிக்கக் கூடாது என்பதற்காக எந்த மாநிலத்திலும் இல்லாத பள்ளி பிள்ளைகளுக்கும் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை அறிவித்து, மகளிருக்கு இதுவரை எந்த மாநிலமும் செய்யாத அற்புதமான திட்டங்களையும் நிறைவேற்றி, இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் செந்தமிழ்நாடு தான் என்ற பெருமையை நிலைநாட்டி இருக்கக்கூடிய முதலமைச்சரே, மீண்டும் அந்த பட்டம் உங்களுக்கே தமிழக மக்களால் வழங்கப்படும். உங்கள் குரலுக்கு பின்னாலே கோடான கோடி  மக்களினுடைய குரல் எழும். உங்கள் கரங்களுக்கு பின்னாலே கோடான கோடி கரங்கள் உயர்ந்து நிற்கும். உங்கள் வெற்றிக்காக பாடுபடும், குரல் கொடுக்கும். வெல்க திராவிடம், வெல்க தமிழ்நாடு” என்று ஆவேசமாகப் பேசினார்.