தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

Advertisment

அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்களான திருச்சி சிவா எம்.பி., ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களான அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மதிமுக அறிவித்திருந்தது. அந்த குழுவில் அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், மு. செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து, மதிமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இன்று (23.02.2026) ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள், “இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றது. எங்கள் (ம.தி.மு.க.) கட்சியின் வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுவார்த்தை குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை நாங்கள் தெரிவிக்க உள்ளோம்.

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் அது முடிவில்லாதது. அதனால் தொடரும். கூடுதல் இடங்கள் கேட்கிறோம். கூடுதல் இடங்கள் எவ்வளவு என்பதை பிறகு தெரியவரும். அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுவார்கள். அதன்பிறகு  தகவல் கொடுப்பார்கள். அதற்குப் பிறகு வருவோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய சின்னத்தில் தனியாக நிற்கும்”எனத் தெரிவித்தனர்.

Advertisment